Saturday 14 September 2013

சங்கர நமச்சிவாயர்


நன்னூலுக்கு, மயிலைநாதருக்குப்பின் உரைஎழுதிப் பெரும்புகழ்
பெற்றவர், சங்கர நமச்சிவாயர். இவர் பதினோழாம் நூற்றாண்டில்
திருநெல்வேலியில் தடிவீரையன் கோயில் தெருவில் வாழ்ந்தவர்; சைவ
வேளாளர் குடியில் தோன்றியவர். அக்காலத்தில் இவரைச் சங்கர நமச்சிவாய
பிள்ளை என்றும், சங்கர நமச்சிவாயப் புலவர் என்றும் வழங்கி வந்தனர்.

இவரது ஆசிரியர், நெல்லை ஈசான மடத்திலிருந்த இலக்கணக்
கொத்தின் ஆசிரியராகிய சாமிநாத தேசிகர். தொல்காப்பியம் முதலிய
இலக்கணங்களையும், சங்க இலக்கியம், வடமொழி நூல்கள் ஆகியவற்றையும்
நன்கு பயின்றார் இவர். சைவ சித்தாந்தங்களையும் திருமுறைகளையும்
வைணவ இலக்கியங்களையும் கற்றுத் தேர்ந்தார். இவரைச் சிறப்புப் பாயிரம்,
“பன்னூற் செந்தமிழ்ப் புலவன்” என்று பாராட்டுகின்றது. சங்கர நமச்சிவாயர்
தம் ஆசிரியராகிய சாமிநாத தேசிகரை,

நன்னெறி பிறழா நற்றவத் தோர்பெறும்
தன்னடித் தாமரை தந்துஎனை ஆண்ட
கருணையங் கடலைஎன் கண்ணைவிட்டு அகலாச்
சுவாமி நாத குரவனை அனுதினம்
மனமொழி மெய்களில் தொழுது

என்று போற்றுகின்றார்.

“சாமிநாத தேசிகர் மட்டுமன்றி இலக்கண விளக்கம் வைத்தியநாத
தேசிகர் முதலியோரும் அவரைப்போன்ற வேறு சில பெரியாரும் இவர்
காலத்தில் திருநெல்வேலியில் இருந்தவர்கள் ஆதலின், கல்வி கேள்விகளில்
சிறந்த ஓர் இலக்கண நூலுக்கு உரை இயற்றுதற்குப் போதிய ஆற்றலைப்
பெறுவது இவருக்கு எளிதாயிற்று” என்பர் டாக்டர் உ.வே. சாமிநாத ஐயர்.

சங்கரநமச்சிவாயர் நன்னூலுக்கு உரை இயற்றக் காரணமாய் இருந்தவர்,
ஊற்றுமலை சமீன்தாராகிய மருதப்ப தேவர். உரைப்பாயிரத்துள்
சங்கரநமச்சிவாயர் ஊற்றுமலை மருதப்பரை,

பொன்மலை எனஇப் புவிபுகழ் பெருமை
மன்னிய ஊற்று மலைமரு தப்பன்
முத்தமிழ்ப் புலமையும் முறையர சுரிமையும்
இத்தலத்து எய்திய இறைமகன்

என்று போற்றுகின்றார். மருதப்பர் கூற, தாம் உரை இயற்றிய வரலாற்றை,

...ஊற்றுமலை மருதப்பன்
‘நன்னூற்கு உரைநீ நவையறச் செய்து
பன்னூற் புலவர்முன் பகர்தி’என்று இயம்பலின்,
நன்நா வலர்முக நகைநா ணாமே
என்னால் இயன்றவை இயற்றும் இந்நூலுள்

என்று உரைக்கின்றார்.

சங்கரநமச்சிவாயர் உரை எழுதிக் கொண்டிருக்கும் போது மருதப்பர்
வேண்டிய உதவிகளைச் செய்து தந்து, உரையை அரங்கேற்றிப் பரிசு நல்கிச்
சிறப்பித்தார்.

நன்னூலுக்கு சங்கர நமசிவாயப்புலவர் எழுதிய உரை மிகச்சிறந்தது
என்று போற்றப்படுவது. அதனை அவர்ஊற்றுமலையரசரின் ஆதரவோடுதான்
எழுதியிருக்கிறார். அவர் அதனை எழுதும்போது மாதம் ஒன்றுக்கு நான்கு கோட்டை
நெல்லும் தினம் ஒருபடிபாலும் கொடுக்கப்பட்டனவாம். பின்னர் பல பரிசில்கள்
வழங்கப்பெற்றார்.


சங்கர நமச்சிவாயர் சைவர் ஆதலின், இவரது உரை முழுதும்
சைவமணம் கமழ்கின்றது. மேற்கோள்களும், எடுத்துக்காட்டும் சைவ சமயச்
சார்பானவையாகும்.

உரைத்திறன்

சங்கர நமச்சிவாயரின் உரைத் திறனை வெளிப்படுத்தும் சிறந்த பகுதிகள்
பல உள்ளன.
‘நடவாமடிசீ’ என்ற நூற்பா (137) நன்னூலாரின் இலக்கணப் புலமையை
உணர்த்தவல்ல சிறந்த நூற்பா என்பதை அறிந்த சங்கர நமச்சிவாயர்
‘கையறியா மாக்கட்கு அன்றி நூலியற்றும் அறவினையுடைய மக்கட்குப்
பல்கலைக்குரிசில் பவணந்தி என்னும் புலவர் பெருமான் புகழ்போல் விளங்கி
நிற்றலான், உலக மலையாமை பத்தழகோடும் பிறந்து நின்றது இ்ச் சூத்திரம்
என்று உணர்க” என்று வியந்து போற்றுகின்றார்.

‘பல்வகைத் தாதுவின் உயிர்க்கு உடல் போல்’ என்ற சூத்திரத்தில்
(268) உள்ள உவமையை, “தோல் இரத்தம் இறைச்சி மேதை எலும்பு மச்சை
சுவேதநீர் என்னும் எழுவகைத் தாதுக்காளினால் உயிர்க்கு இடனாக
இயற்றப்பட்ட உடம்பு போல” என்று விளக்கிப் பொருள் உரைக்கின்றார்.

எச்சங்களை விளக்கும் சூத்திரவுரையில் (360) சில குறள்களுக்கு நல்ல
விளக்கம் கூறுகின்றார். ‘இணர் எரி தோய்வன்ன’ (குறள்-308) என்ற குறளின்
விளக்கம் படித்து மகிழத்தக்கது.

உரியியலில் ‘இன்னாது இன்னுழி’ (நன்-460) என்ற சூத்திரவுரையின்
கீழ், ’இவ்வியலில் சால என்பது முதல் ஆர்ப்பு என்பது ஈறாக நாற்பத்து
ஐந்து உரிச்சொல் எடுத்துச் சுருங்கச் சொல்லுதல்’ என்று உரிச்சொற்களைக்
கணக்கிட்டு உரைக்கின்றார்.

பொருள் கோள்களின் பெயர்ப் பொருத்தங்களைச் சங்கர நமச்சிவாயர்
நன்கு விளக்குகின்றார். அவை பின்வருமாறு:

தாப்பிசை: ஊசல்போல் இடைநின்று இருமருங்கும் செல்லும் சொல்.
தாம்பு என்பது ஊசல்.

அளைமறிபாப்பு: அளை மறிபாம்பு என்பதில் பாம்பு என்பது பாப்பு
என நின்றது.*

மொழி மாற்று: தனக்கு உள்ளதைக் கொடுத்துப் பிறர்க்கு உள்ளதை
வாங்கும் பண்டமாற்றுப் போறல்.

வடமொழிப் புலமை

சங்கர நமச்சிவாயர் தம் வடமொழிப் புலமையை வெளிப்படுத்தும்
இடங்கள் சிலவற்றைக் கீழே காண்போம்:

* வளைக்குள் நுழைகின்ற நல்ல பாம்பு, தலையை முன்னால் வைத்து
உடலைச் சுருட்டி அதன்மேல் தலையை வைக்கும்.
“வட நூலார் இடுகுறியை ரூடி என்னும், காரணத்தை யோகம் என்றும்,
காரண இடுகுறியை யோக ரூடி என்றும் வழங்குப” (62).

“பிரகிருதி விகிருதி என்னும் ஆரிய மொழிகள் பகுதி விகுதி எனத்
திரிந்து நின்றன (133).

“வடநூலார் சொற்பொருளை வாச்சியம் வெங்கியம் இலக்கணை என
மூன்று எனவும், இலக்கணையை வெங்கியத்துள் அடக்கி இரண்டு எனவும்
கூறுப. இவற்றுள் வாச்சியம் என்பது வெளிப்படை; வெங்கியம் என்பது
குறிப்பு; இலக்கணை என்பது ஒரு பொருளினது இலக்கணத்தை மற்றொரு
பொருட்குத் தந்து உரைப்பது; அது விட்ட இலக்கணை, விடாத இலக்கணை,
விட்டும் விடாத இலக்கணை என மூவகைப்படும் (269).

உவமைகள்

இவர் பல இனிய உவமைகளை எடுத்துக்காட்டி, இலக்கணக்
கருத்துக்களை இனிது விளக்குகின்றார். அவ்வுவமைகள் எளியவையாயும்,
சிறியவையாயும் இருப்பினும் கற்போர் உள்ளத்தில் நன்கு பதியவல்லவை.

தொகை வகை விரி என்பவை ஒன்றோடொன்று தொடர்புடையவை
என்பதற்கு “மரத்தினது பராரையினின்றும் கவடு கோடு கொம்பு வளார்
பலவாய் ஒன்றோடொன்று தொடர் பட்டு எழுந்து நிற்றல்போல் என்ற
உவமையைக் கூறுகின்றார் (பாயிரம்).

மேலும், மரங்களைப்பற்றிய பின்வரும் உவமைகளைக் கூறுகின்றார்:

மா பலா முதலியன பராரை முதலிய சினையொடு நின்றன எனக்
கண்டது கூறுவார்போல (141).

கமுகந் தோட்டம் என்றாற்போல (151).

இவைகளேயன்றி முதல் நூல் வழி நூல் சார்பு நூல் என்பவற்றிற்குத்
தந்தை மகன் மருமான் என்பவர்களை உவமை கூறுகின்றார். ஙகரம் சுட்டு
வினா எழுத்துகளை முதலில் பெற்று வருவதற்கு முடவன் கோலூன்றி
வருவதை உவமை கூறுகின்றார். இத்தகைய சிறந்த உவமைகள் உரை
முழுதும் உள்ளன.


போற்றும் நூல்கள்

சங்கர நமச்சிவாயர் தொல்காப்பியம், திருக்குறள், திருக்கோவையார்
ஆகிய மூன்று நூல்களையும் பெரிதும் போற்றுகின்றார். தொல்காப்பியர்
கொள்கையிலிருந்து நன்னூலார்

மாறுபடும் இடங்களைத் தெளிவாகச் சுட்டுகின்றார். இடையிடையே தம்
உரையில் பல தொல்காப்பியச் சூத்திரங்களை மேற்கோள் தருகின்றார்.
தொல்காப்பியவுரைகளை ஆழ்ந்து பயின்று, பொருந்தாவுரைகளை
மறுக்கின்றார்.

திருக்குறளிலிருந்து பல மேற்கோள்கள் இவர் தருகின்றார். ‘பல்வகைத்
தாதுவின்’ என்ற சூத்திரத்திற்கு மேற்கோளாக, ‘வரும் குன்றம் அனையான்’
என்ற திருக்கோவையார் பாடலை எடுத்துக்காட்டுகின்றார்.

இவர் இம்மூன்று நூல்களையும் போற்றிக் கற்றவர் என்பது
தெளிவாகின்றது.


1 comment:

  1. அருமையான கட்டுரை..சிறப்பு
    சங்கர நமச்சிவாயர் ஊத்துமலை மன்னர் மருத்தப்பர் குறித்த பாடலும் செய்தியும் அருமை..

    ReplyDelete